Friday, October 16, 2009

கமல் 50-மேடை பேச்சுக்கள்

விஜய் தொலைக்காட்சியின் கமல் 50 நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து முடிந்து விட்டது.தென் இந்தியாவின் பெயர் பெற்ற கலைஞர்கள் அனைவரும் வந்து கமலை வானளாவ பாராட்டினார்கள்.தென் இந்தியாவின் தலை சிறந்த நடிகர்களுள் கமலும் ஒருவர் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இருக்க முடியாது. மம்மூட்டி சந்தடி சாக்கில் கமலுக்கு ஒரு சவாலும் விட்டார்.இருவரும் மூன்று முறை தேசீய விருது வாங்கி விட்டார்களாம். நான்காவது முறையாக யார் முதலில் பெறுகிறார்கள் என்று பார்ப்போம் என்று சூளுரைத்தார்.மம்மூட்டி கமலை தன்னை விட சிறந்த நடிகராக கருதவில்லை.ஏற்கனவே ஒரு முறை இதே கருத்தை தசாவதாரம் இசை வெளியீடு விழாவில் சொல்லி இருக்கிறார். ஒரு சிறந்த நடிகனாக திகழ்வதற்கு கமல் போல இவ்வளவு கஷ்டப்பட தேவையில்லை என்று அப்பொழுது சொன்னார்.அனால் அவர் கமலின் விடாமுயற்சியையும் அயராத உழைப்பையும் பாராட்டினார்.இருந்தும் அவரை அறியாமலயே கமல் அவரை விட ஒரு படி மேல் என்பதை தனது மேடை பேச்சில் வெளிப்படுத்தினார். ஒரு வெள்ளைக்காரனாக நடிக்க தன்னால் முடியாது என்று ஒத்து கொண்டார். கூடவே கமல் வெள்ளைக்காரனாக நடித்து நிரூபித்து விட்டார் என்றும சொன்னார்.ரஜனி பேசும் பொழுது பல நிஜங்களை வெள்ளந்தியாக வழக்கம் போல பேசினார்.கமல் குறிப்பிட்டது போல தன்னை தாழ்த்தி கொண்டு கமலை உயர்த்தி அவர் பேச வேண்டிய தேவையில்லை.இருந்தும் மிக மிக இயற்கையாக இருந்தது அவரது பேச்சு.இளையராஜா பேசும் பொழுது 'அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.அனால் கடவுளுக்கு அவர் மேல் நம்பிக்கை இருக்கிறது' என்று சொன்னார்.


விழா முழுவதும் கமல் மிகவும் அமைதியாக,முகத்தில் எந்த வித மாற்றங்களையும் கட்டாமல் இருந்தது,தெரிந்தது.அனால் ஏற்புரைக்கு வந்த கமல் தான் எந்த ஒத்திகையும் பார்க்கவில்லை என்று சொன்னார்.உண்மை தான்,அது அவரது பேச்சில் தெரிந்தது.இரண்டு விஷயங்கள் மட்டும் பண்ண கூடாது என்ற முடிவுடன் வந்திருக்கிறேன் என்றார். அழக்கூடாது,உணர்ச்சி வசபடகூடாது இவை ரெண்டும் தான் கமல் குறிபிட்ட அந்த தீர்மானங்கள்.அனால் கமல் வழக்கம் போல உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.காந்திஜியை பற்றி,பெரியார் பற்றி எல்லாம் உயர்வாக பேசினார்.தான் நாத்திகன் அல்ல,பகுத்தறிவாளன் என்று பெருமையாக குறிப்பிட்டார்.அங்கு வந்திருந்த கூட்டம் முழுவதும் கமல் என்ற கலைஞனை தான் பாராட்ட வந்திருந்தார்கள்.அந்த கூட்டத்தில் ஆத்திகர்களும் நாத்திகர்களும் இருந்தார்கள் என்பதையெல்லாம் மறந்துவிட்டு , ஏதோ தி.க.வின் கொள்கை விளக்க கூட்டம் போல ஒரு கருத்தை கமல் உதிர்த்தார்.'ஓன்று மட்டும் சொல்கிறேன்,வரும்காலத்தில் கோவில்களை இடிப்பது நாஸ்திகர்களாக இருக்க மாட்டார்கள்' என்று அறை கூவல் விட்டார். நன்றாக நடந்த ஒரு விழாவில் இது மட்டும் ஏனோ அபஸ்வரமாக ஒலித்தது.இதை கமல் தவிர்த்திருக்கலாம்.

Tuesday, May 5, 2009

மம்மூட்டிக்கு ஏற்பட்ட அனுபவம்

பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி ஏப்ரில் மாதம் 29 ஆம் தேதி, சென்னையில் இருந்து அமெரிக்கா சென்றார். அவரது நண்பர் ஸ்டான்லி களத்தர நியூயார்க் நகர் கவுன்சில் தேர்தலில் போட்டியிடுவதால் அவருக்காக பல இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டங்களில் பேசுவதற்கு தான் சென்றார்.நியூயார்க் ஜான் கென்னடி விமான நிலையத்தில் மம்மூட்டியை 2 மணிநேரம் விமான நிலைய அதிகாரிகள் தடை செய்து விசாரணைக்காக வைத்திருந்தார்கள்.பின்பு இந்திய தூதரக அதிகாரிகள் வந்து தான் அவரை விடுவித்தனர்.எதற்கு என்று தெரியுமா?.பாஸ்போர்ட்டில் இருந்த மம்மூட்டியின் உண்மையான பெயர் தான் இத்தனைக்கும் காரணம்.அவரது பெயர் முஹம்மதுகுட்டி இஸ்மாயில் பனபரம்பில். முஹம்மது இஸ்மாயில் என்ற பெயருள்ள எந்த நபரும் அமெரிக்க மற்றும் பிரிட்டன் விமான நிலையத்தில் இருந்து அவ்வளவ்வு எளிதில் தப்பிவிட முடியாது.இது ஏன் என்று இந்த இரண்டு நாடுகளும் இது நாள் வரை எந்த விதமான விளக்கமும் அளித்ததில்லை.அமேரிக்காவில் உள்ள ஹோம் லாண்டு செக்யூரிட்டி அமைப்பு தான் மம்மூட்டியை சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக பிடித்ததாக அறிவித்தார்கள். பிரபலங்களுக்கு இது போன்ற சிக்கல்கள் இனி மேல நடக்காமல் இருப்பதற்கு இந்திய தூதரகம் அமெரிக்க அதிகாரிகளுடன் பேசியுள்ளார்கள் என்று பின்பு தெரிவிக்கப்பட்டது.நம்ம ஊரில் பிரபலங்களுக்கு சட்டம் பொருந்தாது.சட்டம் பொது மக்களுக்கு மட்டும் தான்.அதே போல அமெரிக்காவும் செய்யும் என்று எதிர்பார்க்கிறது போலும் இந்திய தூதரகம்.

Friday, March 20, 2009

பார்த்ததில் பிடித்தது

சமீபத்தில் நான் பார்த்து ரசித்த இரண்டு திரைப்படங்கள் குறித்த வலை பதிவு இது.முதல் படம் வெனஸ்டே (wednesday) என்ற ஹிந்தி படம். தமிழில் கமல்,மோகன்லால் நடித்து "தலைவன் இருக்கின்றான்" என்ற பெயரில் வெளி வர போவதாக கேள்வி.அதனாலயே மிகவும் ஆர்வமுடன் இந்த திரை படத்தை பார்த்தேன்.(அது சரி, இந்த படம் பார்த்து முடித்த பின்பு இந்த படத்திற்கும் இந்த படத்திற்கு தமிழில் வைத்திருக்கும் பெயருக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்து பார்த்து, மூளை குழம்பியது தான் மிச்சம்.சரி படம் வந்த பிறகாவது புரிகிறதா என்று பார்ப்போம்.தமிழ் பட வழக்க படி தலைப்பு பற்றி ஒரு சீனோ அல்லது ஒரு வசனமோ இல்லாமலா இருக்கும்.)ஒரு புதன் கிழமை மும்பை காவல் துறை ஆணையர் பிரகாஷ் ரத்தொடின் (அனுபம் கேர் ) வாழ்க்கையில் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும் நிகழ்ச்சிகள் தான் இந்த படத்தின் கதை. பிரகாஷ் ஒய்வு பெறும் தருவாயில் அந்த புதன் கிழமை நடந்த நிகழ்ச்சிகளை அவர் விவரிப்பதாக கதை சொல்லபட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் பற்றி காவல் துறையில் எந்த ஆவணமும் கிடையாது,ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த உண்மை என்று பிரகாஷ் கதையின் ஆரம்பத்திலயே சொல்கிறார்.ஒரு புதன் கிழமை மதியம் 2 மணி அளவில் ஒரு மர்ம நபரிடம் (நஸ்ருதீன் ஷா ) இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு அவருக்கு வருகிறது.அவன் குறிப்பிடும் 4 தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறான்.அவனது கோரிக்கையை அலட்சியம் செய்தால் நகரெங்கும் குண்டுகள் வெடிக்கும் என்று மிரட்டுகிறான்.பிரகாஷ் அவரது உதவியாளர்களை அழைத்து அவன் குறிப்பிடும் 4 தீவிரவாதிகள் யாரென்று புலனாய்வு செய்ய சொல்கிறார்.கூடவே தகவலை முதல்வருக்கும் தெரிவிக்கிறார்.சற்று நேரத்தில் மீண்டும் ஒரு அழைப்பு வருகிறது.கமிஷனர் அலுவலகத்திற்கு எதிர் புறம் இருக்கும் காவல் நிலையத்தில் குண்டு வைத்துள்ளதாக மிரட்டுகிறான்.குண்டுகளை செயலிழக்க செய்யும் நிபுணர்களை முடுக்கி விடுகிறார் கமிஷனர்.அவன் ஒரு தொலைக்காட்சி சேனலின் பெண் நிருபரை தொலைபேசியில் அழைத்து,அந்த காவல் நிலையத்திற்கு சென்றால்ஒரு scoop செய்தி கிடைக்கும் என்று சொல்கிறான்.தொடர்ந்து 4 மணி நேரத்திற்கு அவன் காவல் துறைக்கு விடும் மர்ம தொலைபேசி அழைப்புகளும்,மிரட்டல்களும்,பெண் நிருபருக்கு தொலைபேசி வாயிலாக சொல்லும் செய்திகளும், தீவிரவாத நபர்களுடன் காவல்துறையின் கைபேசி மூலமாகவே ஸ்பீக்கர் போன் மூலம் பேசுவதுமாக கதை விறுவிறுப்பாக சற்றும் தொய்வில்லாமல் நகருகிறது.இதற்க்கிடயே கமிஷனர் அவனுடன் உரையாடிகொண்டே,நிபுணர்களின் உதவியுடன் அவன் எங்கிருந்து உரையாடுகிறான் என்பதை கண்காணித்து அறிய முற்படுகிறார்.அவன் சொல்கிறபடி செய்துகொண்டே அவனை பிடிக்கும் திட்டத்தில் கமிஷனர் செயல்படும் பொழுது ,திட்டம் சற்று மாறி நால்வரில் மூவர் கொல்லபடுகிறார்கள்.ஒருவனை காவல்துறை தன் பிடியில் வைத்து கொள்ளும் நேரம்,நான்காவது நபரையும் கொல்லும் படி அவன் தொலை பேசியில் மிரட்டுகிறான். இல்லாவிட்டால் நகரெங்கும் குண்டு வெடிக்கும் என்று மீண்டும் மிரட்டுகிறான். நான்காவது நபரையும் கொன்ற உடன் அவன் கமிஷனருக்கு நன்றி தெரிவித்து விட்டு,தான் எங்கும் குண்டு வைக்கவில்லை என்று சொல்லிவிட்டு,அவன் யாரென்று விளக்குகிறான்.(அது இப்பொழுதே தெரிந்து கொண்டால் தமிழ் படம் பார்க்கும் போது சுவாரஸ்யம் குறைந்து விடும்.மேலும் கமல் கோபித்து கொள்வார்.)இது தான் கதை.நஸ்ருதீன் ஷாவும் அனுபம் கேரும் பிரமாதமாக நடித்துள்ளார்கள்.இந்த படத்தில் பாடல்களே இல்லை.வெறும் ஒன்றரை மணி நேரம் மட்டும் ஓடும் ஒரு சிறிய திரைப்படம்.நீரஜ் பாண்டே திரை கதை அமைத்து மிக அழகாக இயக்கி உள்ளார்.தமிழில் மசாலா படம் எடுக்கும் இயக்குனர்கள் இது போன்ற படங்களை பார்க்கமாட்டார்களோ? .நஸ்ருதீன் ஷா பாத்திரத்தை கமலும்,அனுபம் கேர் பாத்திரத்தை மோகன்லாலும் நடிப்பதாக கேள்வி.நல்ல தேர்வு தான்.அடுத்ததாக ஹிந்தியில் கலக்க போகும் ஒரு படம் திரைக்கு வந்துள்ளதாக கேள்வி.குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த கோத்ரா கலவரத்தின் பின்னணியில் பிராக் (firaaq) என்ற படம் வெளி வந்துள்ளதாக சொல்கிறார்கள்.(சரியாக தேர்தல் நேரம் பார்த்து படத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.வேண்டும் என்றே செய்திருப்பார்களோ ?) இயக்குனராக நடிகை நந்திதா தாசின் முதல் முயற்சி தான் இந்த படம்.


இரண்டாவதாக -காஞ்சீவரம் என்ற தமிழ் திரை படம்.

தமிழில் இப்படி ஒரு படம் வந்துள்ளதா என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது.பிரகாஷ் ராஜ்,ஷ்ரேயா ரெட்டி நடித்த படம்.ப்ரீயதர்ஷன் இயக்கத்தில் வந்துள்ள ஒரு பீரியட் படம் இது.1948 இல் கதை நடப்பதாக காட்டப்படுகிறது.கான்சீவரத்தில் வசிக்கும் ஒரு பட்டு சேலை நெசவாளியின் கதை.கைத்தறியில் பட்டு சேலை நெய்யும் நெசவாளிகளுக்கு,அவர்கள் குடும்ப பெண்களுக்கு பட்டு சேலை வாங்கி தரும் அளவுக்கு பண வசதி இல்லை என்பது தான் கதை கரு.இருந்தாலும் அவர்களுக்கும் அந்த ஆசை உள்ளூர உள்ளது.அவர்கள் குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கும் பட்டு சேலை அணியவேண்டும் என்ற ஆசை உள்ளது.தவிர இந்த படத்தில் சற்று கம்யுனிச சிந்தனைகளையும் தூவி உள்ளார்கள்.Master Weavers என்று சொல்லப்படும் முதலாளிகள் ஏழை நெசவாளிகளுக்கு சரியான கூலி கொடுப்பதில்லை என்றும் காட்டியிருக்கிறார்கள்.வேங்கடம் என்ற பட்டு நெசவாளியாக வருகிறார் பிரகாஷ் ராஜ்.தன் திருமணத்தின் பொழுது தனது மனைவிக்கு பட்டு சேலை வாங்கி கொடுத்து,அதை கட்டி கொண்டு தான் அவள் வர வேண்டுமென்று கனவு காண்கிறார்.அதற்காக பணத்தையும் சேமிக்கிறார்.இருந்தும் சேமிப்பு பற்றா குறையினால்,அவரது கனவு பலிக்கவில்லை.வெறும் நூல் சேலையுடன் தான் அவரது மனைவி வருகிறார்.பிறகு தனது மகளின் திருமணத்தில் அவளுக்கு பட்டு சேலை அணிவிப்பேன் என்று மனைவிக்கு வாக்கு கொடுக்கிறார்.இதற்காக 16 ஆண்டுகளாக சிறிது சிறிதாக சேர்த்த பட்டு நூலால் ரகசியமாக ஒரு சேலை இரவெல்லாம் கண் விழித்து நெய்து வருகிறார்.இடையில் கம்யுனிச சிந்தனைகளால் ஒரு தொழிலாளர் தலைவர் ஆகிறார்.தலைவர் ஆனா பின்பும் ,மகளுக்கு பட்டு சேலை கொடுக்க வேண்டும் என்ற ஆசையில்,தான் வேலை பார்க்கும் இடத்தில இருந்தது,தினமும் சிறிது சிறிதாக பட்டு நூல் திருடுகிறார்.இவை கொண்டு தான் மகளுக்கு ரகசியமாக சேலை நெய்து கொண்டிருக்கிறார்.கூலி உயர்வு கேட்டு போராட்டம் முன் நின்று நடத்துகிறார்.மாத கணக்கில் போராட்டம் தொடர்ந்து நெசவாளிகள் பட்டினியில் அவதி படுகிறார்கள்.அந்த நேரம் அவரது மகளுக்கு திருமணம் உறுதியானவுடன்,மகளுக்கு பட்டு சேலை கொடுக்க வேண்டும் என்ற ஆசையில்,வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று கொண்டு எல்லோரையும் வேலைக்கு செல்ல சொல்கிறார்.அதே நேரத்தில் அவரது திருட்டு வெளியாகி கைதாகிறார்.அம்மா இறந்த பின் அப்பாவுடன் வாழ்ந்த வேங்கடத்தின் பெண், அப்பாவும் கைதாகி சிறைக்கு சென்ற பின், விபத்துக்குள்ளாகி ஒரு பக்கம் செயலிழந்து படுத்த படுக்கயாகிறார்.மகளை பார்க்க பரோலில் வரும் வேங்கடத்தின் பார்வையில் தான் கதை flash back ஆக சொல்லப்படுகிறது.வீட்டுக்கு வந்த வேங்கடத்திடம் அவரது மகளை ஒப்படைத்து விட்டு உறவினர்கள் நழுவி செல்கிறார்கள்.பரோலில் வந்த வேங்கடம் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டி இருப்பதால்,செய்வதறியாது திகைத்து நிற்கிறார்.உணவில் விஷத்தை கலந்து தனது மகளுக்கு ஊட்டுகிறார்.பின்பு பாதி நெய்த நிலையில் இருக்கும் பட்டு சேலையை எடுத்து கண் மூடி கிடக்கும் மகளுக்கு போர்த்துகிறார். பாதி நெய்த நிலையில் இருந்ததால் முழுவதுமாக மூடுவதற்கு பத்தாத அந்த சேலையை மேலும் கீழும் இழுத்து அங்கம் தெரியாமல் மூட ஒரு பைத்தியத்தை போல வேங்கடம் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார்.இந்த காட்சியுடன் படம் முடிகிறது. திரைப்பட விழாக்களுக்கும்,விருதுக்குமாக எடுத்த திரைப்படம் போல் உள்ளது.வங்காள மற்றும் ஆரம்ப கால மலையாள திரைப்படங்கள் போல இது முழுக்க முழுக்க ஒரு ஆர்ட் படம் போலவே உள்ளது.குறிப்பாக வெளிநாட்டு திரை பட விழாக்களை குறி வைத்து எடுத்த படமாகவே உள்ளது.அதனாலயே திரைக்கு வரும் முன்னே திரை பட விழாக்களுக்கு இந்த படத்தை ப்ரீயதர்ஷன் அனுப்பியுள்ளார் என்றே நினைக்க தோன்றுகிறது.பிரகாஷ் ராஜ் மிக அற்புதமாக underplay செய்து நடித்துள்ளார்.ஷ்ரேயா ரெட்டியும் சிறப்பாக நடித்துள்ளார்.திருவின் ஒளிப்பதிவு மிக அருமை. படத்தின் பெரும்பகுதி flashback இல் சொல்லபடுவதால் நிகழ் காலத்திற்கும் ,கடந்த காலத்திற்கும் இரு வேறு டோன்கள் பயன்படுத்தி இருக்கிறார்.Flashback காட்சிகளுக்கு கிட்டத்தட்ட ஒரு கருப்பு வெள்ளை படத்தை பார்ப்பதை போன்ற ஒரு டோன் . நிகழ் காலத்திற்கு வரும் பொழுது அதில் இருந்து நிரம்ப மாறுபட கூடாது என்று நினைத்தோ என்னவோ ஒரு வித sepia டோனில் படம் பிடித்துள்ளார்.மிகவும் மெதுவாக நகரும் கதை ஜனரஞ்சகமாக இல்லாததால்,பொது மக்களிடம் வரவேற்பை பெறுமா என்பது சந்தேகமே.இருந்தாலும் இது ஒரு சிறந்த கலை படைப்பு.இந்திய கிராமங்களின் பீரியட் காலத்தை சித்திரிக்கும் ஒரு சிறந்த கலை படைப்பு.இந்த காலத்தில் பட்டு நெசவாளிகளின் நிலை இவ்வளவு மோசமாக இல்லை என்று நினைக்கிறேன்.அவர்களுக்கு என்று கூட்டுறவு சங்கங்கள் இல்லாத காலத்தில் நடந்த கதை இது.இந்த படத்திலும் பாடல்கள் இல்லை.(ஒரு நான்கு வரி தாலாட்டு பாட்டு வருகிறது.அதை தவிர்த்து வேறு பாடல்கள் இல்லை.)இந்த கதை கருவை இன்றைய காலத்திற்கு ஏற்ற மாதிரி சற்று மாற்றி ,ஒரு பீரியட் படமாக இல்லாமல் எடுத்திருந்தால் இன்னும் அதிகம் சுவாரசியமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.அப்படி எடுத்திருந்தால் ஒரு நல்ல கலை படைப்பு பொது மக்களையும் சென்றடைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

Thursday, March 12, 2009

தேர்தல் கூத்து

நாடாளுமன்ற பொது தேர்தல் அறிவிப்பு வந்து விட்டது.நாள் தோறும் அரங்கேறும் தேர்தல் நேர கூத்து தான் இனி பொது மக்களக்கு பொழுது போக்கு.செய்தி தாள்களில் வரும் விடயங்களை படித்தால் மட்டும் போதும்,தொலைகாட்சியில் வரும் காமெடி நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டி வராது.(ஒரு வேளை இந்த மாதிரி ஏதும் நடந்து விட கூடாது என்று தானோ என்னவோ சன் மற்றும் கலைஞர் தொலைகாட்சியில் புதிய நகைச்சுவை சேனல்களை அறிமுகபடுதியுள்ளார்கள்.)ஆந்திர தேசத்தில் சந்திரபாபு நாயுடு,என்.டி.ஆர். பேரன் ஜூனியர் என்.டி.ஆர் ஐ தாத்தாவை போலவே வேடம் புனைந்து,அவரை போலவே 'சைதன்யா ரதத்தில்' ஆந்திரா முழுவதும் பவனி வர செய்ய போகிறாராம்.(சிரஞ்சீவி அவரை ரெம்ப தான் படுத்துகிறார் போலும்.)இதற்காக ஜூனியர் என்.டி.ஆர் ஒரு மாதமாக தீவிர பயிற்சியில் இருக்கிறாராம்.தாத்தாவின் குரலை போல பேச தான் இந்த பயிற்சி.ஜோதிடர் சொன்னதன் பேரில் காக்கி உடையில் என்.டி.ஆர் ரத யாத்திரை வந்ததை போலவே ஜூனியரும் வர போகிறாராம்.கோவிந்தா(தேர்தல் முடிவு அல்ல),திரை பட நடிகர் ,ஹோலி பெயரில் பொது மக்களக்கு பணத்தை இனாமாக அள்ளி வழங்குகிறாராம். முலயாம் சிங்க் யாதவும் இதை போல செய்துள்ளார்.(உஷார் ! தேர்தல் கமிஷன் பார்த்து கொண்டிருக்கிறது) .தேர்தல் வந்துவிட்டாலே கிரிமினல் குற்றவாளிகளுக்கு யோகம் தான்.அரசியல் கட்சிகள் அவர்களை தேடி பிடித்து தேர்தலில் நிற்க வாய்ப்பளிக்கும்.இதில் வடபுலத்து கட்சிகள் சற்று பிரபலம்.குறிப்பாக BSP,SP,JMM.அதற்க்காக மற்ற கட்சிகளை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்.NEW(National Election Watch) என்ற NGO சொல்கிறது,இது வரை அறிவித்த வேட்பாளர் பட்டியல் படி பார்த்தால் 29 வேட்பாளர்கள் கிரிமினல் குற்ற பின்னணி உள்ளவர்களாம்.இதில் சம்பந்தப்பட்ட கட்சிகள் அனைத்தும் தேசீய கட்சிகள்.காங்கிரஸ்,பி.ஜெ.பி,பி.எஸ்.பி,சி.பி.ஐ,சி.பி.எம்.ஒரு வேட்பாளர் குற்ற பின்னணி உள்ளவரா என்று பார்க்க வேண்டும் என்றால் http://www.nocriminals.org/ என்ற இணையத்தளத்தில் சென்று பார்க்கலாம்.நம்ம ஊரில் கலைஞர்,அம்மாவை குறித்து 'கதாநாயகி காமெடி நடிகையாகி விட்டார்'என்று சொன்னார்.அவர் சும்மா இருப்பாரா, இலங்கை தமிழர் விடயத்தில் கலைஞரின் வில்லன் வேடம் கலைந்து விட்டது என்று கூறினார்.எது எப்படியோ மக்கள் இந்த காமெடி காட்சிகளை மிகவும் ரசிக்கிறார்கள்.இன்னும் என்னவெல்லாம் நடக்க போகிறதோ? ஒரு விடயம் உறுதி. மக்களக்கு சிறந்த பொழுதுபோக்கு காத்து கொண்டிருக்கிறது.

Friday, February 20, 2009

உலக தாய் மொழி தினம் - Feb 21

ஐக்கிய நாடுகளின் கல்வி,அறிவியல் பண்பாட்டு கழகம் feb 21 ஐ 'உலக தாய் மொழி தினமாக' அறிவித்து பத்து ஆண்டுகள் ஆகி விட்டது. உலக அளவில் அனைவரும் தாய்மொழி தினத்தில் அவரவர் மொழி வளர்ச்சிக்கும்,வளம் பெறுவதற்கும் மொழி ஆர்வத்துடன் தொடர்ந்து பணி செய்ய உறுதி எடுத்து கொள்ள வேண்டும்.நான் ஆங்கிலம்,தமிழ் மற்றும் மலையாளம் என்று மூன்று மொழிகளில் எனது பதிவுகளை இணையத்தில் பகிர்ந்து வருகிறேன். ஏதாவது ஒரு மொழியில் எழுதிய இடுக்கையை குறித்த விடயத்தை மீண்டும் எனது மற்ற இரண்டு மொழி பதிவுகளில் நான் எழுதுவதில்லை . உலக தாய் மொழி குறித்து, தாய் மொழி தமிழில் வலை பதிவு இடுக்கை எழுத வேண்டும் என்பதினாலயே இந்த பதிவினை ஆங்கிலம் தவிர தாய் மொழி தமிழிலும் பதிவு செய்து உள்ளேன்.தாய் மொழியை பேணி காக்காத காரணத்தினால், இன்று உலகில் பல மொழிகள் வழக்கில் இல்லாமல் மறைந்து போய் விட்டது.உலகில் உள்ள 7000 மொழிகளில் சுமார் 2500 மொழிகள் வழக்கழியும் அபாயத்தில் உள்ளதாக யுனெஸ்கோ மன்றம் கூறுகிறது.தேவைக்கு ஏற்ப மட்டும் தாய் மொழி தவிர்த்து, பிற மொழிகளில் உரையாடுவதும், எழுதுவதும் தொடர்ந்து செய்து வந்தால் அவரவர் தாய் மொழியை அழியும் அபாயத்தில் இருந்து காப்பாற்ற முடியும். நான் இப்படி சொல்வதை யாரும் மொழி வெறி என்று எண்ணிவிட வேண்டாம். எல்லோருக்கும் அவரவர் மொழி குறித்து பற்று கட்டாயம் இருக்க வேண்டும். எல்லா மொழிகளும் சிறந்த மொழிகளே, தாய் மொழி தினம் கொண்டாடுவதின் நோக்கமே, உலகில் வழக்கில் உள்ள எல்லா மொழிகளும் பல்லாண்டு தொடர்ந்து நீடிக்க வேண்டும்,வளர வேண்டும், அந்த மொழியின் கலாசாரம், பண்பாடு அழியாமல் பாதுகாக்க பட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் தான்.யுனெஸ்கோவின் சமீபத்திய அறிக்கை படி இந்தியாவில் சுமார் 196 மொழிகள் அழியும் அபாய நிலையில் உள்ளது. நமக்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் 192 மொழியும் ,இந்தோனேஷியாவில் 142 மொழியும் வழக்கழியும் நிலையில் உள்ளது.மொழி பேசுவர்களின் எண்ணிக்கை குறைவது,இளையவர்கள் தாய் மொழி பயிலாமல் இருப்பது,மொழி அறிந்தவர்களின் சராசாரி வயது அதிகமாக இருப்பது போன்றவை ஒரு மொழி அழிவை நோக்கி செல்வதற்கான அறிகுறி என்று சொல்லப்படுகிறது. எனவே தாய் மொழியை பேணி காப்பாற்றுங்கள்.தாய் மொழி நம் எண்ணமெல்லாம் நிறைந்து இருந்தால் என்றும் அழிவில்லை.

Tuesday, February 17, 2009

நான் கடவுள் விமரிசனம்

பாலாவின் 'நான் கடவுள்' வழகத்திற்கு மாறான ஒரு திரைப்படம்.இந்த காலத்தில் இதுபோன்ற ஒரு திரை படம் எடுக்க எத்தனை இயக்குனர்களுக்கு துணிவு இருக்கும் என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.பாலாவிற்கு தன் மேல் இருக்கும் அசாத்திய நம்பிக்கையின் வெளிப்பாடு தான் 'நான் கடவுள்' என்று நான் நினைக்கிறேன்.விளிம்பு நிலை மனிதர்களை பற்றிய ஜெயமோகனின் 'ஏழாவது உலகம்' நாவல் தான் படத்தின் மூல கதை என்று சொல்கிறார்கள். அந்த நாவலை நான் படித்ததில்லை.நாவலில் அகோரி ருத்திரன் போன்ற ஒரு கதாபாத்திரம் உண்டா என்றும் தெரியவில்லை. நமக்கு தெரிந்தவரை அகோரிகள் காசியில் வாழும் சாதுக்கள். பொதுவாக மக்கள் ஒரு வித மிரட்சியுடன்யே இது வரை அகோரிகளை பார்த்துள்ளார்கள். அதற்க்கு காரணம் அவர்களது வாழ்க்கை முறை. அகோரிகள் வாழ்வது மயானத்தில். பெரும்பாலும் நிர்வாணமாகவே திரிவார்கள்.சிலர், பிணங்கள் மேல் சார்த்தப்படும் உடைகளை அணிவர்.இன்னும் சிலர் கோவணத்துடன் திரிவார்கள்.மயானத்தில் உள்ள சாம்பலை அள்ளி உடல் முழவதும் உடை போல் பூசி கொள்வார்கள்.பிணங்கள் மத்தியில் அமர்ந்து தியானம் செய்வார்கள்.போதை வஸ்துக்களை பயன்படுத்துவார்கள். பிணங்களை அகோரிகள் உணவாக தின்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.இது போன்ற அகோரிகளை ஒரு வித் பீதியுடனயே சாதாரண மக்கள் இது நாள் வரை பார்த்து வந்துள்ளார். 'நான் கடவுள்' திரைப்படம் அகோரிகள் மேல் உள்ள இந்த எண்ணத்தை மாற்றும் என்று நான் நினைக்கிறேன். துஷ்டர்களையும் அழிக்கவும் அநீதியை எதிர்க்கவும் உலகில் அவதாரம் எடுத்த சாதுக்கள் தான் இந்த அகோரிகள் என்று ஒரு வித எண்ணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.அந்த அளவுக்கு எதார்த்தமாக படமாக்கப்பட்டுள்ளது.இந்த திரைப்படத்தில் வரும் ருத்திரன் தன்னை கால பைரவன் என்று சொல்லி கொள்கிறான். கால பைரவன் சிவனின் ஒரு அவதாரம்.ருத்ரனாக ஆர்யா மிக சிறப்பாகவே வாழுந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.ஆர்யாவின் 'பாடி லாங்க்வேஜ்' மிக சிறப்பாக உள்ளது. அவருக்கு படத்தில் மிக குறைவான அளவு வசனங்களே உள்ளது. இருந்தும் கரகரத்த குரலில் பேசியும்,பார்வையில் உக்கிரத்தை காட்டியும், சண்டை காட்சிகளில் ஆக்ரோசத்தை காட்டியும், தலை கீழாக நின்று யோகாசங்களை செய்தும் அகோரி ருதிரனாகவே மாறிவிடுகிறார். அவரது திரைப்பட வாழ்க்கையில் இது ஒரு திருப்புமுனை படம் என்றே சொல்லலாம்.படத்தின் இன்னொரு சிறப்பம்சம் இசைஞானியின் இசையும் பின்னணி இசையும் தான். sound effects க்கு படம் முழுவதும் தனி கவனம் எடுத்துள்ளது நன்றாக தெரிகிறது. அனைத்து effects உம் இயற்கையாகவே உள்ளது.குறிப்பாக சண்டை காட்சிகளின் effects தரம் வாய்ந்தவை. ஓம் சிவோகம் மற்றும் பிட்சை பாத்திரம் பாடல்கள் மிகவும் இனிமையானவை.இதில் 'பிட்சை பாத்திரம்' பாடல் இசைஞானியின் 'ரமணமாலை' குறுந்தகடில் இருந்து எடுத்து திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாடலை இயற்றியவரும் இசைஞானி தான். பாடல் வரிகள் பெரிய தத்துவங்களையே உதிர்க்கின்றன. பிட்சைகாரர்களின் சோகமான வாழ்க்கைக்கு நடுவே இருக்கும் மெல்லிய நகைச்சுவ உணர்வு மிக பிரமாதமாக காட்டப்பட்டுள்ளது. இது போன்ற ஒரு நிழல் உலகம் இருப்பது சமீபத்தில் தான் 'slumdog millionaire' திரைப்படத்தில் பார்த்தோம்.இது இன்னொரு வகை(தென்னிந்திய வகை) அவ்வளவு தான். நிஜ வாழ்க்கையில் இது போன்ற அவலங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொருவர் பூஜா. மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கும் இது ஒரு milestone movie என்றே சொல்லவேண்டும்.திரை படத்திற்காக சில compromise களையும் பாலா செய்துள்ளார். காவல் நிலைய பாடல் பற்றி தான் நான் குறிப்பிடுகிறேன். தனியாக காமெடி ட்ராக் இல்லாததால் பிதாமகன் பாணியில் இந்த பாடலை வைத்துள்ளார் போலும். கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் மிக சிறப்பான stunt choreography . இது போல மிகவும் இயற்கையாக சண்டை காட்சிகளை யாரும் இதுவரை படமாகியிருப்பதாக எனக்கு தோன்றவில்லை.பாலா ஒரு perfectionist என்று எல்லோருக்கும் தெரிந்தது தான். இருந்தாலும் இந்த படத்திற்கு மூன்று ஆண்டுகள் எடுத்துகொண்டார் என்று நினைக்கும் பொழுது அவரது திறமைக்கு அது சற்று அதிகம் என்றே தோன்றுகிறது. இந்த நீண்ட இடைவெளியினால் ஏதோ ஒரு வித எதிர்பார்ப்பு இருந்தது என்பதும் உண்மை தான். காசியில் எடுத்துள்ள அகோரிகளின் வாழ்க்கை ஒரு சிறந்த் டாக்குமெண்டரி படம் பார்ப்பது போல உள்ளது. கதை தென் தமிழ் நாட்டுக்கு மாறும் பொழுது சற்று சினிமாத்தனம் கதையில் நுழைந்து விடுகிறது.மற்ற இயக்குனர்களில் இருந்து வித்தியாசமாக படம் எடுக்க கூடியவர் பாலா என்பது இன்னொரு முறை நிருபிக்கப்பட்டுள்ளது.slumdog போலவே இதுவும் மற்றொரு underdog பற்றிய திரைப்படம். Every dog has its day.

Sunday, February 15, 2009

பாராட்டுக்கள் -FOSTERA

Fostera என்பது Fostering Technologies in Rural Areas என்பதன் சுருக்கம். போச்டீரா கிராமங்களில் BPO,Call Centre போன்றவைகளை அமைத்து கிராமத்து இளைஞ்சர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்காக தொடங்கப்பட்டது.இதில் என்ன சிறப்பு என்றால் இது ஒரு அரசு நிறுவனம்.ELCOT என்ற அரசு நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் பங்களிப்புடன் இந்தியாவிலயே முதன்முதலாக மிகவும் பின் தங்கிய கிராமம் ஆன சனசந்திரம் என்ற இடத்தில் தனது சேவையை துடங்கி சிறப்பாக நடத்தி வருகிறது.ஆங்கில அறிவு அதிகம் இல்லாத, குறைந்த பட்ச கல்வி அறிவு உள்ள கிராமத்து இளைஞ்சர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி அளித்து call centre வேலை வாய்ப்பு அளித்துள்ளார்கள்.பல பன்னாட்டு நிறுவங்களும் வங்கிகளும் இவர்களின் சேவையை நாடி வருகிறார்கள் தற்பொழுது.வெறும் பள்ளி கல்வியுடன் படிப்பை முடித்த பல ஆண்களுக்கும் பெண்களுக்கும் நல்ல ஊதியத்தில் வேலை வாய்ப்பு அவர்களின் கிராமத்திலயே இந்த அமைப்பு வழங்கியுள்ளது.கிராம முன்னேற்றம் குறித்து பலரும் வாய் கிழிய பேசி வரும் வேளையில் சத்தமின்றி ஒரு புரட்சியை செய்து முடித்து வெற்றி கண்டிருக்கிறார்கள் Fostera அமைப்பினர்.சேவையை விரிவுபடுத்த இன்னும் பலருக்கு பயிற்சியும் அளித்து வருகிறார்கள்.நாட்டிற்கே இது ஒரு முன் மாதிரி . இவர்களுக்கு பயிற்சி அளித்த Microsoft India அதிகாரி கிராமத்து இளைஞ்சர்களின் புரிந்து கொள்ளும் திறனை பார்த்து வியந்துள்ளார். கிருஷ்ணகிரியை அடுத்து தஞ்சாவூர் மாவட்டத்திலும் Fostera விரிவுபடுத்த உள்ளது.தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் இதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டமும் தஞ்சையை பின் பற்ற முடிவு செய்துள்ளது.சென்னையை சேர்ந்த Adventity என்ற கணினி துறையை சேர்ந்த நிறுவனம் Fostera வுடன் இணைந்து பல உதவிகள் செய்ய முன் வந்துள்ளது.மிக பெரிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் Fostera விற்கு பணிகள் குடுப்பதற்கு முன் வந்துள்ளது மிகவும் ஆரோகியமான ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையின் data management உம் இந்த அமைப்பு செய்கிறது.தவிர மும்பை மற்றும் புனே போன்ற பெரு நகரங்களில் உள்ள aviation industry சம்பந்தப்பட்ட வேலைகளையும் இவர்கள் செய்கிறார்கள்.கிருஷ்ணகிரி மாவட்டதிலயே இன்னும் ஒன்றிரண்டு இடங்களில் மேலும் சேவையை விரிவுபடுத்த உள்ளார்கள். இந்தியாவின் மிக பெரிய IT நிறுவனங்களின் அதிகாரிகள் நிறைந்த ஒரு Naascom குழு Fostera வின் செயல்பாடுகளை சென்று பார்த்து வியப்படைந்து பாராட்டியுள்ளார்கள்.இதை ஒரு முன்னோடியாக எடுத்து கொண்டு நாட்டின் பல கிராமங்களிலும் இது தொடர வாய்ப்பிருக்கிறது.நமது அரசியல்வாதிகள் இதில் மூக்கை நுழைத்து அரசியலாக்காமல் இருந்தால் IT மிகவும் வேகமாக கிராமங்களை சென்றடையும்.

Wednesday, January 7, 2009

பொய்யும் சத்யமும்

கடந்த டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி 'திவாலாகும் பெரிய நிறுவனகள்' என்று நான் எழுதிய இடுக்கையில் இந்திய நிறுவனங்களும் இதே போல முறைகேடுகள் செய்கிறார்களா என்று தெரியவில்லை,ஆனால் முதலீட்டாளர்கள் அவர்களின் ஆண்டு அறிக்கைகளை முழுதும் நம்புகிறார்கள் என்று எழுதி இருந்தேன்.தற்பொழுது வெளி வந்திருக்கும் சத்யம் கம்பனியின் சேர்மன் ராமலிங்க ராஜுவின் முறைகேடான செயல்களும் அதற்க்கு துணை நின்ற தணிக்கை நிறுவனங்களும் ஒரு மிக பெரிய கேள்வியை எழுப்புகிறது. வேண்டுமென்றே தணிக்கை கம்பனியின் துணையுடன் தவறான கணக்கு வழக்குகளை காட்டி தன் கம்பனியின் பங்குகளின் சந்தை விலை உயர காரணமாக இருந்திருக்கிறார். இது இன்று நேற்று நடந்ததாக இருக்காது .பல காலமாக கையிருப்புகளையும் ,வங்கி கணக்குகளையும் அதிக அளவில் காட்டி அது கிட்டத்தட்ட 5000 கோடி அளவுக்கு வந்துவிட்டது.அதாவது இல்லாத பணத்தை இருப்பதாக காட்டி பங்குதாரர்களையும் பொதுமக்களையும் ஏமாற்றி வந்திருக்கிறார்.கம்பனி சட்ட படி கம்பனிகள் காலாண்டு,அரையாண்டு மற்றும் முழு ஆண்டு கணக்கு மற்றும் லாப நஷ்ட கணக்குகளை காட்ட வேண்டும,உரிய அரசு மற்றும் பங்கு சந்தை சார்ந்த நிறுவனங்களுக்கும் அளிக்க வேண்டும். பொதுவாக அந்த அறிக்கைகளில் அதற்க்கு முந்தின காலாண்டு கணக்கு வழக்கு மற்றும் சென்ற ஆண்டு இதே சமயத்தில் உள்ள அறிக்கை இவற்றையும் அதனுடன் தெரிவிக்க வேண்டும். அதை பார்த்து கம்பனியின் நிதி நிலைமையில் முன்னேற்றம் உள்ளதா என்று பங்குதாரர்கள் மற்றும் பங்கு சந்தை தெரிந்து கொள்ள ஏதுவாகும் என்பது தான் இதன் உத்தேசம்.இந்த அறிக்கையை பொறுத்து அந்த கம்பனியின் பங்குகளுக்கு சந்தையில் மவுசு கூடும் குறையும். இதை நன்றாக புரிந்து வைத்துள்ள சத்யம் போன்ற கம்பனிகள் தவறான கணக்குகளை ஒவ்வொரு காலாண்டு அறிக்கையிலும் காட்டி இன்று இந்த நிலைமைக்கு வந்துள்ளது. இது தணிக்கையாளர்களின் உதவி மற்றும் வங்கிகளின் ஆதரவும் இல்லாமல் எந்த நிறுவனத்தாலும் செய்ய முடியாது.இது தவிர உபெயடு என்று அமெரிக்கா கம்பனியுடன் ஆன ஒப்பந்த ஷரத்துகளை சத்யம் நிறுவனம் மீறி இருக்கிறது. முறைகேடுகளும் செய்துள்ளது. இந்த முறைகேடுகள் காரணமாக சமாளிக்க முடியாத நிலைமை வந்த உடன் Mayatas என்ற கம்பனியின் பங்குகளை முழுவதுமாக சத்யம் நிறுவனம் வாங்குவதாக கூறி மற்றும் ஒரு முறைகேடு செய்ய துணிந்தார். Mayatas என்பது சத்யம் நிறுவனத்தின் இன்னொரு கம்பனி தான். சத்யம் என்ற ஆங்கில எழுத்தை திருப்பி எழுதி பார்த்தால் Mayatas என்று வரும்.இந்த விஷயம் தெரிந்த பங்குதாரர்கள் எதிர்க்கவும் உடனடியாக அந்த முயற்சி கை விடப்படுகிறது. FII என்ற சொல்லப்படும் Foreign Institutional Investment மற்றும் FDI என்று கூறப்படும் Foreign Direct Investment இவைகளுக்கு ஆசைப்பட்டே பல நிறுவனங்கள் தங்களின் பங்கு சந்தையை நிலவரத்தை செயற்கையாக உயர்த்தி காட்ட முயற்சித்து இது போன்ற முறைகேடுகளை செய்கிறது. இது IT துறையில் மட்டுமே நடந்திருக்கம் என்று சொல்வதற்கில்லை. எங்கெல்லாம் பங்கு சந்தையில் ஒரு bouyant market இருந்ததோ அங்கெல்லாம் நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.இப்பொழுது வெளி வந்திருப்பது ஒரு சிறு விஷயம் மட்டுமே என்று எனக்கு தோன்றுகிறது. இதே போல மற்ற துறைகளிலும் வேறு பல கம்பனிகளும் இருக்கலாம் என்றே தோன்றுகிறது.இவர்களின் செயல்பாடுகளால் தான் சென்செக்ஸ் ராக்கெட் வேகத்தில் ஏறியது. முதலீடு செய்த வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை திரும்ப பெற்றதும் நமது கம்பனிகள் ஆட்டம் காண ஆரம்பித்தன. சென்செக்ஸ் வேகமாக இறங்கு முகத்திற்கு வந்தது. இவர்களின் இந்த விளையாட்டால் பொருளாதார சிக்கல் ,விலை வாசி ஏற்றம், முதலியவைகளால் பொதுமக்கள் அவதி படுகிறார்கள். அரசாங்கம் சட்ட விதிமுறைகளை இன்னும் கடுமையாக்கி SEBI போன்ற அமைப்புகளுக்கு இன்னும் பரவலான் அதிகாரங்களும் வழங்கி இது போன்ற முறைகேடுகள் மேலும் நடக்காமல் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.தொழில் நேர்மை இல்லாமல் தவறுக்கு உடந்தையாக இருக்கும் தணிக்கை நிறுவனங்களுக்கும் வங்கிகளுக்கும் கடுமையான தண்டனை வழங்கவும் சட்ட திருத்தங்கள் தேவை.