தமிழ் பேச்சு வழக்கில் ஆங்கில சொற்கள் கலந்து பேசுவதை நாம் பார்த்திருக்கோம். ஆனால் சில ஆங்கில மற்றும் தமிழ் சொற்களை தவறாக பயன்படுத்த படுவதை பார்க்கும் போது இந்த சொற்கள் எப்படி வழக்கில் வந்திருக்கும் என்று நான் யோசிப்பது உண்டு. அதன் விளைவே இந்த கட்டுரை. நன்கு படித்தவர்களும் சரி, படிப்பறிவு இல்லாதவர்களும் சரி அதிகமாக பயன்படுத்தும் ஒரு சொல் 'அசால்ட்' என்பதாகும். எனக்கு தெரிந்து தமிழில் அசால்ட் என்று ஒரு சொல் இல்லை. ஆனால் ஆங்கிலத்தில் அசால்ட் (assault) என்று ஒரு சொல் உண்டு. ஆனால் அதற்க்கு பொருளே வேறு. தமிழில் இந்த சொல்லை பயன்படுத்துபவர்கள் பலரும் என்ன பொருளில் பயன் படுத்துகிறார்கள் என்று பார்போம்.
'எந்த பிரச்சினயாக இருந்தாலும் அவர் அசால்டா சமாளிச்சிடுவார்.'
'எதை பற்றியும் கவலையே இல்லை .எப்ப்பவும் அசால்ட் தான்.'
இந்த இடத்தில் அசால்ட் என்ற சொல் என்ன அர்த்தத்தில் பயன் படுத்த பட்டிருக்கிறது என்று பார்ப்போம். சுலபமாக, அனாயசமாக கைகாரியம் செய்யும் திறமை உள்ளவர் என்ற பொருள் .
இரண்டாவது எடுத்துக்காட்டில், care free என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அது போல ஒரு மன நிலை என்ற பொருளில் சொல்லபட்டிருக்கிறது.
தமிழில் அசால்ட் என்று சொல் இல்லை. ஆங்கிலத்தில் அசால்ட் என்றால் ஒருவரை தாக்குவது . ஆங்கில சொல்லுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு பொருளில் இந்த சொல் எப்படி பயன்பாட்டில் வந்திருக்கும் என்று யோசித்ததில் என் அறிவிற்கு எட்டியது என்ன என்று பார்போம். தமிழில் அசட்டை என்று ஒரு சொல் உண்டு. அதன் பொருள் இப்பொழுது சொல்லப்படும் பொருளுக்கு சற்று பொருத்தமாக இருக்கிறது. அசட்டை( indifferent ) என்று ஆங்கிலத்தில் ஒரு பொருள் உண்டு. அந்த பொருள் ஏறக்குறைய சரியாக வரும். அசட்டை என்ற தமிழ் சொல்லை தான் தவறாக அசால்ட் என்று சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
இதை விட கொடுமை இன்னொன்று இருக்கிறது. சாதரணமாக பேச்சு வழக்கில் இருக்கும் நல்ல தமிழ் சொற்களை அப்படியே ஆங்கில மொழி மாற்றம் செய்து பேசுபவர்கள் சிலர் உண்டு. இதை இந்திய ஆங்கிலம் என்று கூட சொல்லலாம்.
அந்த காலத்தில் பெண்கள் மத விடாய் காலத்தில் வீட்டில் இருந்து சற்று விலகி இருப்பார்கள். அதற்க்கு சில சமூகத்தினர் 'தூரம்' என்றும் ( வீட்டிலிருந்து தூரத்தில் இருப்பது ), இன்னும் சிலர் 'வீட்டு விலக்கு ' என்று குறிப்பிட்டு வந்தார்கள். ஏனோ சிலர் இப்படி சொல்வது கொச்சையாக இருக்கிறது என்று கருதினார்களோ என்னவோ, அதை அப்படியே ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து 'out of doors'
என்று சொல்கிறார்கள்.
நண்பர் ஒருவரை சந்திக்க போயிருந்தேன். அவரும் இது போல தமிழ் சொற்களை ஆங்கில மொழி மாற்றம் செய்து பேசுபவர். அவர் வரும் வரை காத்திருந்தேன். வீட்டிற்குள் இருந்து வரும் போதே அவர் 'சாரி , அவுட்ட்சைடு போயிருந்தேன் '
என்று சொன்னார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. வீட்டிற்குள் இருந்து தானே வருகிறார் , ஏன் இப்படி சொல்கிறார் என்று வியந்தேன். எனது வியப்பை புரிந்து கொண்டு அவர் மீண்டும் தன் கால்களை பார்த்து கொண்டே 'அவுட்டுசைடு போயிருந்தேன்'. ஈரமாக இருந்த அவரின் கால்களை பார்த்து நான் ஓரளவு புரிந்து கொண்டேன். அவர் கழிப்பறையில இருந்து வந்திருக்கிறார் என்று. வீட்டிற்குள் இருக்கும் கழிப்பறையில் இருந்து வருவதை அவர் ஏன் ஆங்கில சொல் ஆன
அவுட்ட்சைடு என்று குறிப்பிடுகிறார் என்று நான் யோசித்தேன். இதுவும் கழிப்பறையில் இருந்து வருகிறேன் என்று சொன்னால் கொச்சையாக இருக்கும் என்று கருதி அப்படியே ஆங்கில மொழி மாற்றம் செய்து பேசுகிறார்கள். சரி, இந்த சொல் எப்படி தான் வந்திருக்கும் ?
அந்த காலத்தில் வீட்டிற்குள் கழிப்பறைகள் இருந்ததில்லை . காலை கடன்களை
கழிப்பதற்கு வெட்ட வெளிக்கு தான் போவார்கள் . வெட்ட வெளிக்கு போவது தான் கால போக்கில் வெளிக்கு போவது என்று மாறிவிட்டது . வெளிக்கு போவது என்றால் எல்லாருக்கும் புரியும். ஆனால் வீட்ட்ற்க்குள் கழிப்பறைகள் வந்த பின்பும் இச்சொல் பயன் பாட்டில் இருந்திருக்கிறது. இது கொச்சையாக இருக்கும் என்று கருதி அப்படியே ஆங்கில மொழி மாற்றம் செய்து விட்டார்கள். என்ன கொடுமை சார் இது !!
Thursday, July 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment