சில நாட்களுக்கு முன் பத்திரிகையில் ஒரு செய்தி படிக்க நேரிட்டது. புது டில்லியில் ஒரு விழாவில் சோனியா அவர்களும் அத்வானி அவர்களும் அருகருகே மகிழ்சிசியாக உரையாடி கொண்டிருக்கும் ஒரு படத்தை பார்த்து விட்டு தமிழக முதல்வர் " பார்க்க பொறாமையாக இருக்கிறது . இது போல தமிழகத்தில் ஏன் இல்லை ? " என்று வினவியுள்ளார். உண்மை தான். இதை தான் அனைத்து பொது மக்களும் கேட்கிறார்கள்.அரசியல் வேறு தனி மனித உறவுகள் வேறு என்று ஏன் இன்னும் தமிழக அரசியல் வாதிகள் புரிந்து கொள்ளவில்லை?இதே போல அரசியல் வேறு ,தொழில் முறை உறவு வேறு என்றும் இவர்கள் புரிந்து கொள்ளவில்லை. சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியே இதற்க்கு சான்று.நடிகை குஷ்பூ ஒரு அரசியல் கட்சியில் தன்னை இணைத்து கொண்ட உடனே எதிர்க்கட்சி தொலைக்காட்சி சேனலில் அவர் தொழில் ரீதியாக பல ஆண்டுகளாக செய்து வந்த நிகழ்ச்சியும் சீரியல்களும் நிறுத்தப்பட்டன என்று செய்தி வெளியாகியுள்ளது.எதிர் கட்சி நண்பரின் வீட்டு விழாக்களில் கலந்து கொண்டால் தனது கட்சியில் பதவி பறிக்கப்பட்டு விடும் அல்லது கட்சியில் இருந்து நீக்கபடுவோம் என்று அஞ்சுபவர்கள் ஏராளம்.இது தமிழ் நாட்டில் மட்டும் நிகழும் ஒரு அவலம். அப்படியே தப்பி தவறி ஒருவர் எதிர் கட்சி நபரின் வீட்டு விழாவுக்கு சென்று அங்கே மாற்று கட்சி நண்பரை சந்திக்க நேரிட்டால் முகத்தை திருப்பி கொள்வதும் அல்லது பார்க்காதது போல இருப்பதும் வேடிக்கையான நிகழ்வுகள்.இருவரும் சந்தித்து மகிழாவாக உரையாடும் புகைப்படம் எங்கேனும் வந்துவிட்டால் அவர் தலை தப்பாது.அடுத்த கணமே அவர் கட்சியிலிருந்து நீக்கபடுவார்.கட்சிகளின் இந்த அணுகுமுறையை பயன்படுத்தி வேண்டாதவர்கள் இதே போன்று புகைப்படங்களை தயார் செய்து கட்சி தலைமைக்கு அனுப்பி சம்பந்தப்பட்டவர்களை கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட நிகழ்சிகளும் தமிழகத்தில் நடைபெற்றுள்ளது.இதே போன்ற நிகழ்சிகள் வேறு எந்த மாநிலத்திலும் நடை பெறுவதில்லை.திருமண விழாக்களில் கலந்து கொள்ளும் கட்சி பிரமுகர்கள் வாடிக்கையாக மேடையில் அரசியல் பேசும் வழக்கத்தையும் இவர்கள் தான் ஆரபம்பித்து வைத்தார்கள்.திருமண விழா மேடையில் எங்கிருந்து அரசியில் வந்தது ?இப்படி திருமண மேடைகளில் அரசியல் பேசுவதால் தான் மாற்று கட்சியினர் திருமண விழாக்களுக்கு வருவதை தவிர்க்கின்றனர்.அப்படி பேசப்படும் கருத்துக்களுக்கு மறுப்பு சொன்னாலும் வம்பு மறுத்து பேசாவிட்டாலும் வம்பு.எதற்கு வம்பு என்று இவர்கள் இது போன்ற விழாக்களை தவிர்த்துவிடுகின்றனர்.இது ஒரு ஆரோக்யமான போக்கு அல்ல.
தனிமனித துதிகள் அளவுக்கு அதிகமாக தமிழக அரசியில் களத்தில் காணலாம்.இதுவும் மற்ற மாநிலங்களில் பார்க்கபடாத ஓன்று.அளவுக்கு அதிகமாக புகழ் பாடி அச்சடிக்கப்படும் சுவரொட்டிகளை பார்த்தால் பல நேரங்களில் எரிச்சல் வருகிறது. எங்கு பார்த்தாலும் ப்ளெக்ஸ் போர்டுகள் ஆளுயர விளம்பரங்கள்.இது போன்ற விளம்பரங்களில் வரும் துதிகளை படித்தால் என்ன சொல்ல வருகிறார் என்று கூட புரிவதில்லை.பேரூந்தில் செல்லும் பொழுது நகரெங்கும் ஓட்டபெட்டிருக்கும் இது போன்ற சுவரொட்டிகளை படித்தால் நன்றாக பொழுது போகும்.திருமண விழாவுக்கு வரும் தலைவரை வரவேற்று ப்ளெக்ஸ் போர்டுகள் ஆளுயர சுவரொட்டிகள்,பத்தரிகைகளில் முழு பக்க விளம்பரங்கள்,திருமண மண்டபம் இருக்கும் சாலை எங்கும் சுவரொட்டிகள் என நகரையே கலங்க அடித்து விடுவார்கள்.திருமணம் முடிந்த பின்பு இன்னார் இல்ல திருமணத்திற்கு வந்து வாழ்த்திய தலைவருக்கு நன்றி தெரிவித்து மீண்டும் சுவரொட்டிகள்.ஏதாவது கட்சியின் அரசியல் மாநாடு வந்து விட்டாலோ கட்சியின் தலைவர் பெயரில் "அழைக்கிறார்" சுவரொட்டிகள் முளைக்க ஆரம்பித்து விடும்.கட்சியிலோ,வாரியத்திலோஅல்லது அரசிலோ ஏதாவது பொறுப்பு யாருக்கேனும் கிடைத்துவிட்டால் மீண்டும் ப்ளெக்ஸ் போர்டுகள் ,சுவரொட்டிகள் நன்றி தெரிவித்து நகரெங்கும் ஓட்ட பெற்றிருக்கும். பத்திரிகளையும் விட்டு வைக்க மாட்டார்கள். பதவி கிடைத்தவரின் அடிவருடிகள் கட்சி தலைமைக்கு நன்றி தெரிவித்து முழு பக்க விளம்பரங்கள் கொடுப்பார்கள்.இது போன்ற விளம்பரங்களுக்கு ஏங்குவது ஒரு வித மனோ வியாதி .தங்களின் விஸ்வாசத்தை காண்பிப்பதற்கு இதை விட்டால் வேறு வழி அவர்களுக்கு தெரியவில்லை போலும். இதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை என்ற போட்டி வேறு.இந்த போக்கு ஏதோ அரசியல்வாதிகளிடம் மட்டும் தான் என்று நினைக்க வேண்டாம்.இதை பார்த்து எல்லா மட்டத்திலும் இந்த வியாதி பரவ ஆரம்பமாகி விட்டது.சினிமா ரசிகர்கள் அவர்களின் பங்குக்கு இதை போல செய்கிறார்கள்.அதை விட கொடுமை பொதுமக்கள் தங்கள் வீட்டு விழாக்களுக்கும் வைபவங்களுக்கும் ப்ளெக்ஸ் போர்டுகள்,சுவரொட்டிகள் பத்திரிகை விளம்பரங்கள் போன்றவை கொடுப்பது தமிழகத்தில் மட்டுமே நடக்கும் ஓர் அதிசயம்.தங்கள் வீட்டு பெண்ணின் பூ பெய்தல் விழாவுக்கு நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டி சுவரெங்கும் தேர்தல் விளம்பரம் போல் பெரிய பெரிய எழுத்துகளில் வண்ண வண்ண அழைப்பிதழ்களை எழுதி வைப்பவர்களை பார்த்தால் என்ன தோன்றும் உங்களுக்கு?சுமார் 26 ஆண்டுகளுக்கு முன்பே மதுரையில் ஒரு பொங்கல் தினத்தன்று காலையில் சாலைக்கு வந்த நான் பார்த்தது இன்றும் நன்றாக நினைவிருக்கிறது.அன்றைய தினம் புகழின் உச்சியில் இருந்த ஒரு கவர்ச்சி நடிகையின் ரசிகர்கள் அந்த நடிகையின் பெயரில் மதுரை வாழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்து என்று நகரெங்கும் சுவரொட்டி ஒட்டியிருந்தார்கள்.இதனால் யாருக்கு என்ன லாபம்.?தங்கள் கை காசை செலவழித்து யாரோ ஒரு நடிகையின் பெயரில் நகர மக்களுக்கெல்லாம் வாழ்த்து சொல்வதால் இவர்கள் அடையும் பயன் என்ன? இதற்கெல்லாம் ஒரே காரணம் தான் உண்டு.அந்த சுவரொட்டிகளில் தங்களின் பெயரும் வந்து எல்லோரும் படிப்பார்கள், நாமும் பிரபலமாகலாம் என்ற ஆசை.இது போன்ற விளம்பர மோகத்தையும் துதிபாடிகளையும்,அரசியல் வாதிகளும் ,பிற பிரபலங்களும் தவிர்த்தால் மற்றவர்களும் அவர்களை பின்பற்றாமல் இருப்பார்கள்.புகழுக்கு மயங்காதவர் யாருமில்லை என்றே சொல்லலாம்.இருந்தாலும் அளவுக்கு அதிகமாக துதி பாடுவதும் அந்த துதிகளை ஏற்று கொள்வதும் ஒரு வித அருவருப்பை ஏற்படுத்துகிறது.அரசியல் வாதிகள் குறிப்பாக தலைவர்கள் இது போன்றைகளை அனுமதிக்க கூடாது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்த ஒரு சம்பவம் என நினைவுக்கு வருகிறது.காந்திஜியின் நூற்றாண்டு விழா நடந்து கொண்டிருந்த நேரம்.அப்போது நான் படித்து கொண்டிருந்த கல்லூரியின் தாளாளர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர். கல்லூரியில் ஒரு வார விழாவாக காந்திஜியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது .மாணவர்களுக்கு பல போட்டிகள் மாணவர்கள் பங்கேற்ற காந்திஜியை பற்றிய கவி அரங்கம்,பட்டி மன்றம் போன்றவை நடந்து கொண்டிருந்தது.விழாவின் கடைசி நாள் அன்று அன்றைய எதிர் கட்சி தலைவர் காமர்ரசர் வந்திருந்தார்.காந்திஜியின் நூற்றாண்டு விழா என்பதால் ஒப்பு கொண்டு வந்தார். அவர் கல்லூரிக்கு வருவது பற்றி யாருக்கும் முன்கூட்டியே தெரியாது. எந்த வித அறிவிப்பும் கிடையாது.வரவேற்ப்பு முன்னேற்பாடு என்று எதுவும் கிடையாது.ஒரு சுவரொட்டி கிடையாது,ஒரு வாழ்த்து அட்டை கிடையாது.திடீரென்று மாணவர்களிடையே ஒரு சலசலப்பு.என்னவென்று கேட்டபொழுது காமர்ரசர் கல்லூரி ஆடிடோரியம் முன்பு வந்து கொண்டிருக்கிறார் என்று சொன்னார்கள்.அவர் அரங்கத்தின் வாயிலை அடைந்த உடன் அவருடன் வந்த சிலரோ அல்லது மாணவர்களில் சிலரோ "தலைவர் காமராசர் வாழ்க " என்று கோஷம் போட்டனர்.காமராசர் அவர்களை திரும்பி பார்த்து முறைத்து விட்டு கைகளை உயர்த்தி காட்டி நிறுத்துங்கள் என்பது போல் சைகை செய்தார்.ஓரிரு வினாடிகள் மௌனமாக வந்த அவர்கள் அவர் முன்னே நடக்கவும் மீண்டும் கோஷம் எழுப்பினார்கள்.அவருக்கு வந்ததே ஒரு கோபம்.சட்டென்று திரும்பி பார்த்து "நிருத்துங்கன்னேன்" என்று உரக்க சொன்னார்.அவர்கள் கப்சிப் என்று அடங்கி விட்டனர்.வேகமாக நடந்து மேடைக்கு சென்று வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டும் பேசிவிட்டு உடனே சென்று விட்டார். இந்த நிகழ்ச்சியை நான் மிக அருகில் இருந்து பார்த்தேன். வெறும் வாழ்த்து கோஷம் போட்டதற்கே அவருக்கு அந்த அளவுக்கு கோபம் வந்தது.அவர் அதை ஆதரிக்கவில்லை.அது போன்று இன்றைய வளரும் தலைவர்களும் துதி பாடிகளை சற்று கட்டு படுத்தினால் அவர்களுக்கும் நல்லது தமிழ் நாட்டிற்கும் நல்லது .செய்வார்களா ?

No comments:
Post a Comment