Saturday, November 29, 2008

மும்பை தந்த பாடம்

மும்பையில் மூன்று நாட்களுக்கு ஒரு யுத்தம் நடந்து முடிந்திருக்கிறது.உயிரை பணயம் வைத்து சிக்குண்டவர்களை மீட்ட தனிபடையினர்,காவல் துறையினர் ராணுவத்தினர் மற்றும் தீயணைப்பு படையினர் நாட்டு மக்களின் ஏகோபித்த பாராட்டுக்கு உரியவர்களே.இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் இருப்பதற்கு அரசு முனைப்புடன் திட்டமும் நடவடிக்கையும் எடுக்கிறது. இருந்தும் இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடப்பது வாடிக்கையாகிவிட்டது.ஒரு தீவிரவாத நிகழ்வு நடந்த சில மணி நேரங்களுக்கு உள்ளாகவே உளவுத்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் சில துப்புகளை வெளியிடுகிறார்கள்.இன்னும் சில சமயங்களில் தீவரவாதி ஊடுருவியது எவ்வாறு என்றும் தெரிவிக்கிறார்கள்.இந்த தகவல்கள் முன்கூட்டியே தெரிந்திருந்தும் ஏன் தடுப்பு நடவடிக்கை எடுக்க முடியாமல் போகிறது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.சந்தேகத்தின் அடிப்படையில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்க போதுமான அதிகாரங்கள் இருந்தும் ஏன் இந்த சுணக்கம் என்று ஆராய்ந்து உடனடியாக தீர்வு காணவேண்டும்.துப்புகள் இருந்தும் நடவடிக்கை எடுக்க என்ன தடையாக இருக்கிறது? அரசியல் காரணங்களா அல்லது வேறு காரணங்கள் ஏதும் உண்டா என்று தெரியவில்லை. இது போன்ற நிகழ்வுகள் எப்படி நடக்கும்,எப்போது நடக்கும்,எங்கு நடக்கும் என்று தெரியாத வரையில் இது ஒரு மிக பெரிய சவால் தான். வெளியில் செல்லும் குடும்பத்தினர் பாதுகாப்புடன் திரும்புவார்களா என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.ரயில்,பஸ் மற்றும் விமான பயணங்களும் ஆபத்தானவை ஆக மாறி விட்டது.ஒருபுறம் தீவிரவாத தடுப்பு நடவடிக்கையும் மறுபுறம் பிடிபட்ட தீவிரவாதிகளை திருத்தி மறுவாழ்வு அளிக்கவும் அரசு முன் வரவேண்டும். சவுதி அரேபியாவில் பிடிபடும் தீவிரவாதிகளுக்கு அரசு கவுன்சிலிங்க் செய்து மறுவாழ்வு அளிக்கிறது.தவறான வழி காட்டுதலே தீவிரவாதத்திற்கு காரணம்.சவுதியில் இந்த முறை வெற்றிகரமாக இருக்கிறது. திரும்பவும் தீவிரவாதத்திற்கு செல்பவர்கள் மிக மிக குறைவே.மதம்,இனம்,சாதி வேறுபாடுகளை குறிவைத்து தீவிரவாதம் பேசும்,செயல்படும் அனைத்து தரப்பினரையும் எந்த வித பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு நமது காவல்துறையினருக்கு அரசியல் குறுக்கீடு இல்லாமல் இருந்தாலே போதும் என்று நான் நினைக்கிறேன்.கட்சி வேறுபாடுகளை மறந்து அனைத்து அரசியல் வாதிகளும் அரசியல் கட்சிகளும் காவல்துறையினர் எடுக்கும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் குறிக்கிடாமல் இருக்கவேண்டும்.கடல்,ரயில்,பஸ் மற்றும் விமானம் மூலமாக நாட்டிற்குள் வரும் சந்தேகத்திற்குரிய வெளிநாட்டவரை தடுக்கும் அதிகாரம் இன்னும் பரவலாக்க படவேண்டும். எல்லை பாதுகாப்பு இன்னும் தீவிரமாக்கி ஊடுருவல்களை தடுக்கவேண்டும்.சந்தேகப்படும்படியான பிரசுரங்கள்,இணையதளங்கள் இவைகளை வெளயிடும் நபர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.மாநில காவல் துறையினர்க்கும் தீவிரவாதத்தை தடுக்க போதுமான அதிகாரங்கள் வழங்கவேண்டும்.தீவிரவாதத்தை எதிர்த்து பொதுமக்களை திரட்டி அவப்போது விழிப்புணர்வு போராட்டங்கள் நாடு முழுவதும் தன்னார்வ நிறுவனங்கள் நடத்தவேண்டும்.தீவிரவாதத்தை தைரியமாக எதிர்கொள்ள பொதுமக்களுக்கு வேண்டிய பயிற்சிகள் கொடுக்கவேண்டும்.திரண்ட மக்கள் சக்தியை எதிர்த்து எந்த தீவிரவாதமும் தாக்கு பிடிக்க முடியாது.இன்றைய தினம் மக்கள் தீவிரவாதத்தை கண்டு ஒதுங்கிறோம்.நிராயுதபாணியாக இருந்தாலும் தீவிரவாதத்தை எதிர்த்து மக்கள் சக்தி திரளவேண்டும்.சந்தேகத்திற்கு உரிய நபர்கள் நடவடிக்கைகள் குறித்து உடனடியாக தகவல்களை உரியவர்களுக்கு தெரிவிக்க பொது மக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். தீவிரவாதத்தை தடுப்பது அரசு மற்றும் காவல் துறையினரின் பணி மட்டுமே அல்ல.அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து சுதாரிப்பாக இருந்தால் பல முயற்சிகளை முறியடிக்க முடியும்.மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடங்களை தேர்வு செய்து அழிவு சக்திகள் சதி செய்யும் பொழுது யார் கண்ணிலும் படாமல் இருக்க முடியாது.போதிய விழிப்புணர்வு இல்லாததும் ,பயமும் தான் மக்கள் சக்தி ஓன்று பட தடையாக இருப்பது.எப்படி காவல் துறையினருக்கு உதவ ஹோம் கார்ட் பிரிவு உள்ளதோ அதே போல ஒவ்வொரு ஊரிலும் ஒரு plain cloth Anti terrorist force இருக்க வேண்டும்.இதன் கட்டுப்பாடு காவல் துறையினரிடமோ அல்லது தனிபடயினரிடமோ இருக்க வேண்டும். பொது மக்கள் அதிக அளவில் தீவரவாததிற்கு எதிராக திரும்பினால் மட்டுமே தீவரவாதத்தை ஒழிக்கமுடியும் என்று நான் நம்புகிறேன்.இது ஒரு பொது சேவை என்பதால் தியாக உணர்வோடு இதை அணுகவேண்டும்.சேதங்கள் ஏற்படுமாயின் அதற்கும் தயாராக இருக்க வேண்டும்.கோடி கணக்கில் இருக்கும் நாட்டு மக்களின் பல ஜோடி கண்கள் தம்மை கண்காணிக்கிறது என்று தீவரவாதிகள் உணர வேண்டும்.காவதுறையினர் எல்லா இடத்திலும் பாதுகாப்பு தரவேண்டும் என்பது இயலாத காரியம்.அரசு தீவிரவாத விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்,செய்தி சுருள்கள்,பத்திரகை விளம்பரங்கள் ,தொலை காட்சி விளம்பரங்கள் ஆகியவை வெளியிட வேண்டும்.மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு கருத்துக்களை ஒளிபரப்ப வேண்டும்.கடுமையான சட்டங்கள்,நவீன ஆயுதங்கள்,இவைகளும் தேவை தான்.ஆனால் இவ்வை எல்லாம் இருந்தும் தீவிரவாதம் கட்டுக்குள் வரவில்லை என்பது தான் நிதர்சனமான் உண்மை.இனி செய்ய வேண்டியது மக்கள் சக்தியை திரட்டுவது ஒன்றே.

No comments:

Post a Comment