சில நாட்களாக காஷ்மீரில் நடக்கும் கலவரங்களும் போராட்டங்களும் மிகுந்த மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. இந்தியா தனது 61 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் காஷ்மீரி சகோதரர்கள் ஒருவருக்கு ஒருவர் அடித்து கொண்டிருக்கிறார்கள். அரசியல் லாபம் தேட நினைக்கும் அரசியல் கட்சிகளே இதற்க்கு முக்கிய காரணம். பொதுமக்கள் இதை புரிந்து கொள்ளும் நாள் என்று தான் வருமோ? .இதை ஆரம்பித்து வைத்த அரசியல் கட்சிகளுக்கே இதை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என்று தெரியாமல் விழித்து கொண்டு இருக்கிறார்கள் என்பது தான் உண்மை நிலவரம்.கலவரத்தில் ஈடுபடும் இரண்டு சமுதாய நண்பர்களும் முக்கியமான சில விஷயங்களை நினைவில் வைத்து கொள்வது மிகவும் முக்கியம். இரு சமுதாய மக்கிளிடையே நிலவி வந்த நல்லெண்ணத்தினால் உருவான ஒரு ஆலயம் தான் இந்த அமர்நாத் ஆலயம்.சரித்திர சான்றுகள் படி காஷ்மீர் ஒரு பெரிய நீர் தேக்கம் ஆக இருந்திருக்கிறது. காஷ்யப ராய் என்பவர் இந்த நீரை வெளியேற்றிய போது அமர்நாத் குகையும் லிங்கமும் தெரிந்ததாக கூறப்படுகிறது.பின்னர் பெர்கிஷ் ரேஷி என்பவர் ஹிமாலயத்திற்கு செல்லும் போது மீண்டும் இந்த குகையும் லிங்கத்தையும் கண்டிருக்கிறார்.மற்றுமொரு முறை பூட்டா மாலிக்கு என்ற முஸ்லீம் இடைய சிறுவனுக்கு ஒரு முனிவர் ஹிமாலயத்தில் வைத்து ஒரு சாக்கு மூட்டை நிறைய கரி கட்டைகளை கொடுக்கிறார். வீட்டுக்கு வந்த சிறுவன் மூட்டையை திறந்த போது மூடை முழுவதும் தங்கமாக இருந்திருக்கிறது.சந்தோஷத்தில் முனிவரை பார்க்க மீண்டும் அந்த இடத்திற்கு செல்கிறான் அந்த சிறுவன். அங்கு அந்த முனிவர் இல்லை. ஆனால் அந்த இடத்தில் ஒரு குகையும் லிங்கமும் தென்படுகிறது.அன்று முதல் அமர்நாத் ஹிந்துக்களின் புண்ணிய ஸ்தலம் ஆக மாறுகிறது. மிக முக்கியமாக கவனிக்க பட வேண்டிய விஷயம் என்னவென்றால் ,இன்று வரை அமர்நாத் கோவிலுக்கு கிடைக்கும் காணிக்கை வருமானத்தில் இருந்தது ஒரு பங்கு அந்த முஸ்லீம் சிறுவனின் வழி தோன்றல்களுக்கு அளிக்கப்படுகிறது.மீதம் உள்ள பணத்தை மட்டுமே கோவில் அறகட்டளை எடுத்து கொள்கிறது. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பு இருந்தே பனி லிங்கம் தரிசிக்க பட்டதற்கான சரித்திர சான்றுகள் உள்ளது.நமக்கு தெரிந்து பாடல் பெற்ற ஸ்தலம் தான் அமர்நாத்.
இது மட்டுமல்ல ,காலம் காலமாக அமர்நாத் யாத்திரை சென்று வரும் பக்தர்களுக்கும் சாதுக்களுக்கும் , காஷ்மிரீ முஸ்லீம்கள் அன்னதானம் செய்து வந்திருக்கிறார்கள்.இன்றும் செய்கிறார்கள்.இரு சமுதாயத்தினரிடையே உள்ள நல்லெண்ணத்திற்கு இதுவே சான்று.இப்படி இருக்கையில் அரசாங்கத்தால் அமரநாத் ஆலயத்திற்கு அளிக்கப்பட்ட நிலத்திற்கு முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்களா ? இது அரசியல் ஆதாயம் தேட சில அரசியல் கட்சிகள் செய்த சூழ்ச்சி.அதே அரசாங்கம் நிலம் அளித்ததை திரும்ப பெற்ற பின்னும் போராட்டங்கள் நடைபெறுவது எதை காட்டுகிறது? அமைதியை விரும்பும் பொதுமக்கள் என்று தான் இதை எல்லாம் புரிந்து கொள்வார்களோ? இன்று நடக்கும் போராட்டம் நிலம் அளித்ததை எதிர்த்து அல்ல. அந்த பெயரில் ஆரம்பித்த போராட்டம் இன்னும் தொடருகிறது.வழக்கம் போல ஆடு நனைந்தால் ஓநாய் வருத்தப்படுவது போல நமது அண்டை நாடான பாகிஸ்தான் இந்த சாக்கில் குளிர் காய நினைக்கிறது.அதிபர் முஷாரப்க்கு இருக்கும் உள்ளூர் நெருக்கடியில் இருந்து தப்புவதற்காக அமர்நாத் பிரச்னையில் மூக்கை நுழைக்கிறார்.இதை நாம் அனுமதிக்கலாமா? அரசியல் மாட்சியங்களை மறந்து ,நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக சம்பந்தபட்ட அரசியல் கட்சிகள் போராட்டத்தை தூண்டி விடாமல் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் .
Saturday, August 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment