Friday, October 16, 2009

கமல் 50-மேடை பேச்சுக்கள்

விஜய் தொலைக்காட்சியின் கமல் 50 நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து முடிந்து விட்டது.தென் இந்தியாவின் பெயர் பெற்ற கலைஞர்கள் அனைவரும் வந்து கமலை வானளாவ பாராட்டினார்கள்.தென் இந்தியாவின் தலை சிறந்த நடிகர்களுள் கமலும் ஒருவர் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இருக்க முடியாது. மம்மூட்டி சந்தடி சாக்கில் கமலுக்கு ஒரு சவாலும் விட்டார்.இருவரும் மூன்று முறை தேசீய விருது வாங்கி விட்டார்களாம். நான்காவது முறையாக யார் முதலில் பெறுகிறார்கள் என்று பார்ப்போம் என்று சூளுரைத்தார்.மம்மூட்டி கமலை தன்னை விட சிறந்த நடிகராக கருதவில்லை.ஏற்கனவே ஒரு முறை இதே கருத்தை தசாவதாரம் இசை வெளியீடு விழாவில் சொல்லி இருக்கிறார். ஒரு சிறந்த நடிகனாக திகழ்வதற்கு கமல் போல இவ்வளவு கஷ்டப்பட தேவையில்லை என்று அப்பொழுது சொன்னார்.அனால் அவர் கமலின் விடாமுயற்சியையும் அயராத உழைப்பையும் பாராட்டினார்.இருந்தும் அவரை அறியாமலயே கமல் அவரை விட ஒரு படி மேல் என்பதை தனது மேடை பேச்சில் வெளிப்படுத்தினார். ஒரு வெள்ளைக்காரனாக நடிக்க தன்னால் முடியாது என்று ஒத்து கொண்டார். கூடவே கமல் வெள்ளைக்காரனாக நடித்து நிரூபித்து விட்டார் என்றும சொன்னார்.ரஜனி பேசும் பொழுது பல நிஜங்களை வெள்ளந்தியாக வழக்கம் போல பேசினார்.கமல் குறிப்பிட்டது போல தன்னை தாழ்த்தி கொண்டு கமலை உயர்த்தி அவர் பேச வேண்டிய தேவையில்லை.இருந்தும் மிக மிக இயற்கையாக இருந்தது அவரது பேச்சு.இளையராஜா பேசும் பொழுது 'அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.அனால் கடவுளுக்கு அவர் மேல் நம்பிக்கை இருக்கிறது' என்று சொன்னார்.


விழா முழுவதும் கமல் மிகவும் அமைதியாக,முகத்தில் எந்த வித மாற்றங்களையும் கட்டாமல் இருந்தது,தெரிந்தது.அனால் ஏற்புரைக்கு வந்த கமல் தான் எந்த ஒத்திகையும் பார்க்கவில்லை என்று சொன்னார்.உண்மை தான்,அது அவரது பேச்சில் தெரிந்தது.இரண்டு விஷயங்கள் மட்டும் பண்ண கூடாது என்ற முடிவுடன் வந்திருக்கிறேன் என்றார். அழக்கூடாது,உணர்ச்சி வசபடகூடாது இவை ரெண்டும் தான் கமல் குறிபிட்ட அந்த தீர்மானங்கள்.அனால் கமல் வழக்கம் போல உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.காந்திஜியை பற்றி,பெரியார் பற்றி எல்லாம் உயர்வாக பேசினார்.தான் நாத்திகன் அல்ல,பகுத்தறிவாளன் என்று பெருமையாக குறிப்பிட்டார்.அங்கு வந்திருந்த கூட்டம் முழுவதும் கமல் என்ற கலைஞனை தான் பாராட்ட வந்திருந்தார்கள்.அந்த கூட்டத்தில் ஆத்திகர்களும் நாத்திகர்களும் இருந்தார்கள் என்பதையெல்லாம் மறந்துவிட்டு , ஏதோ தி.க.வின் கொள்கை விளக்க கூட்டம் போல ஒரு கருத்தை கமல் உதிர்த்தார்.'ஓன்று மட்டும் சொல்கிறேன்,வரும்காலத்தில் கோவில்களை இடிப்பது நாஸ்திகர்களாக இருக்க மாட்டார்கள்' என்று அறை கூவல் விட்டார். நன்றாக நடந்த ஒரு விழாவில் இது மட்டும் ஏனோ அபஸ்வரமாக ஒலித்தது.இதை கமல் தவிர்த்திருக்கலாம்.